Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Sunday, February 13, 2011

பாலர் பள்ளி (முன்பருவக் கல்வி)

எல்லாக் குழந்தைகளும் விவேகமாக இருக்குமென எதிர்பார்ப்பது தவறு

குறைகளை பிள்ளைப் பருவத்தில் கண்டறிந்து பரிகாரம் காணுங்கள்!


ஒரு குழந்தையின் வளர்ச்சியில் இரண்டு முதல் ஆறுவரை உள்ள மழலைப்பருவம் மிக முக்கியமானது எனலாம். இப்பருவத்தில் குழந்தைகளுக்கு கிடைக்கும் அனுபவங்களே அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு ஊன்றுகோலாகின்றது என்று கூறினாலும் மிகையாகாது. இதன் அடிப்படையில் இப்பருவத்திற்கு உகந்த அனுபவக் கல்வியை அளிப்பது இன்றியமையாத ஒன்றாகும் என்பதை பெற்றோரும் ஆசிரிய சமூகமும் உணர்ந்திட வேண்டும்.

எனவே மழலைகளின் முன்பருவக் கல்வி (CHILDHOODPRE - EDUCATION)  தொடர்பாக விரிவாக ஆராய்வது இங்கு உசிதமாகும். முதலில் பள்ளி முன்பருவக்கல்வியின் முக்கியத்துவமும் குறிக்கோள்களும் (IMPORTANCE AND - OBJECTIVES OF PRE - SCHOOL EDUCATION)  பற்றி நோக்குவோம்.
பள்ளி முன் பருவக் கல்வி அல்லது பாலர் கல்வி (NURSERY) என்னும் கல்வி சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பிளேட்டோ  (PLATO) என்ற அறிஞர் முன்பருவக் கல்வியின் தாற்பரியங்களை நன்கு உணர்த்தியுள்ளார்.
  
அதன்பின் வந்த பல்வேறு கல்வித்துறை அறிஞர்களும் முன்பள்ளியின் முக்கியத்துவத்தையும் குறிக்கோள்களையும் விபரித்துள்ளார்கள். இருப்பினும் அக்கல்விக் கொள்கைகள் செயல் முறையாக்கப்பட்டதும் அதற்கென தனிநிறுவனங்கள் ஸ்தாபிக்கப்பட்டதும் சமீபகாலத்தில் தான் என்றும் கூறலாம்.

கல்வி என்னும் பெரும் கோபுரத்திற்கு அடித்தளமாக அமைவது முன்பருவக்கல்விதான் என்பது மறுப்பதற்கில்லை. சரியான அடித்தளம் இல்லாத கட்டடம் அவ்வப்போது பாதிப்புக்குள்ளாவதைப் போன்று முன்பருவக் கல்வி பெற்றுக்கொள்ளாத மாணவர்கள் தமது அன்றாட கற்கை நெறிகளை மேற்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கோக்குகின்றனர்.
குழந்தைகளின் இரண்டரை வயது முதல் ஐந்து வயது வரையுள்ள பருவத்தை முன்பருவம் என்று அழைக்கலாம். இப்பருவ காலத்தில் தான் மழலையின் அறிவு வளர்ச்சியில் ஐம்பது சதவீதமானவை நிறைவடைகின்றது. இதனை ஆய்வாளர்களும் உறுதிப்படுத்துகின்றனர்.

  எனவே பள்ளி முன்பருவத்தினருக்கு உகந்த முறையில் நல்ல சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்து ஊக்குவித்தால் நிச்சயமாக அவர்கள் விடலைப் பருவத்தை எய்தும் வேளையில் எல்லாத்துறைகளிலும் சிறந்த ஆளுமையுடையவர்களாகத் திகழ்வார்கள் என்பது கண்கூடு. இதன் மூலம் அவர்கள் முழு வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பும் இலகுவில் கிட்டுகின்றது.
 கிராமத்தில் வாழ்பவர்களில் அதிகமானோர் வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள்தான். எனவே சமூக பொருளாதாரம் நலிவுற்ற நிலையில் அனேகமானோர்களுக்கு தமது குழந்தைகளை முன்பருவப் பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு சாத்தியப்படாமல் போகவும் வாய்ப்பு உண்டாகின்றது.

பொருளாதார மேம்பாடு உடைய கல்வியறிவு படைத்தோர் நவீன உலகில் உலாவுகின்ற அனைத்து சாதனங்களையும் தமது வீட்டில் வைத்திருப்பார்கள். குழந்தை அவற்றின் பெயர் இயங்கும் முறை என்பவற்றை அவ்வீட்டில் உள்ளோரிடம் கேட்டு அறிந்து கொள்கின்றது.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் அமெரிக்க மக்கள் குழந்தை வளர்ச்சி பற்றி ஆராய்வதற்கு திடசங்கற்பம் பூண்டனர். இதன் அடிப்படையில் அமெரிக்க உளவியல் நிபுணர்கள் மேற்கொண்ட பல ஆய்வுகளில் குழந்தைகளின் மிக முக்கியமான பருவம் முன்பள்ளி பருவமே என்பதை உணர்த்தின.
மழலைகளின் உடல் வளர்ச்சி (PHYSICAL DEVELOPMENT), இயக்க வளர்ச்சி (MOTOR DEVELOP - MENT),  மன வளர்ச்சி (EMOTIONAL DEVELOPMEWT),  அறிவு வளர்ச்சி, மொழி வளர்ச்சி (LAWGUADE DEVELOPMENT), சமூக வளர்ச்சி (SOCIL DEVELOPMEWT) ஆகியவை மிக வேகமாக வளர்ச்சி பெறுகின்றன என்பது ஆய்வுகளின் பெறுபேறுகளாகும்.


ஒரு குழந்தையை நாம் விரும்பும் விதம் மாற்ற வேண்டுமாயின் இப்பருவத்தில் தான் அது சாத்தியப்படும். ஆகவேதான் இப்பருவத்தை நெகிழ்வுடைப் பருவம் (PLASTIC PERIOD) என அழைக்கின்றனர். இதனாலன்றோ “ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது” என்ற பழமொழி தோன்றியிருக்கலாம்.

குழந்தைகளிடையே தென்படுகின்ற குறைபாடுகளை தொடக்கத்திலே இனங்கண்டு கொண்டால் (IDENTIFICATION OF PROBLEMS)  அவற்றைப் போக்குவது எளிதாகிறது. உதாரணத்திற்கு குறைவான மன வளர்ச்சி (LOWMEWTAL DEVELOP MENT)  கண்பார்வைக்குறைவு, காது கேளாமை, உடல் ஊனங்கள் என்பன சில குழந்தைகளிடையே காணப்படும் குறைபாடுகளாகும்.
இவற்றைச் சிறு வயதிலே கண்டு கொண்டால் பெரும்பாலும் இவற்றை நீக்கிவிடலாம். எந்தவிதமான கவனிப்பும் இன்றி வீட்டில் வளரும் குழந்தைகள் பிற்காலத்தில் மிகுந்த வேதனைக்கு ஆளாக வேண்டிவரும் என்பது நிதர்சனமாகும். மழலைகள் முன்பருவப் பள்ளிக்கு வருகைதரும் போது பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் தினமும் குழந்தைகளின் உடல் நிலையையும் அவர்களின் செயலாற்றும் திறமைகளையும் கவனித்து வருவதால் எளிதில் குறைபாடுகளைக் கண்டு கொள்கின்றனர்.
  
பள்ளி முன்பருவக் கல்வியின் தாற்பரியங்களை நான்கு பிரிவுகளாக வகுக்கலாம். ஒன்று குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல். இரண்டாவது சிறுவர்களிடையே நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்தல், மூன்றாவது குறிக்கோளாகும். குழந்தையின் முழுவளர்ச்சியை ஊக்குவித்தல் நான்காவதாகத் திகழ்கின்றது. இவை நான்கும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்துள்ளன.

ஏதாவதொன்று வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டால் முழுமையான வளர்ச்சியினை எதிர்பார்க்க முடியாது. எனவே குழந்தையின் முழு வளர்ச்சிதான் பள்ளி முன் பருவக் கல்வியின் குறிக்கோளாக அமைய வேண்டும் என்பது வெள்ளிடைமலை.

ஒரு வீட்டிலோ, வகுப்பறையிலோ எல்லாக் குழந்தைகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அவர்களிடையே பல வேறுபாடுகள் காணப்படுகின்றன. குறைபாடுகளும் உள்ளன. சிலர் விரைவாகவும் சிறப்பாகவும் எதையும் கற்றறிந்து கொள்கின்றனர். சிலர் மந்தமாக இருக்கிறார்கள் கற்பதில் அவர்களுக்கு பெரும் கஷ்டம் உள்ளது. சிலருக்கு பாடுவதிலும், பேசுதலிலும், ஓவியம் வரைதலிலும், விளையாட்டுக்களிலும் மாறுபட்ட விருப்பமும், திறனும் உள்ளது.

ஒரு சாதாரண குழந்தையிடமிருந்து (NORMAL CHILD) உடல் மன வளர்ச்சி குன்றுவதாலோ, வேறுபட்டாலோ, ஊனத்தாலோ அல்லது மீத்திறன் உடையதாகவோ அல்லது சிறப்புத் தேவைகள் அவர்களுக்கு நல்க நேர்ந்தாலோ அக்குழந்தையை அசாதாரணக் குழந்தை (EXCEPTIONAL CHILD)   என்கின்றோம். இவர்களுக்கு ஏற்றவாறு பயிற்றுவித்தால் ஊனம் அல்லது குறைபாடு ஒரு பெரும் பிரச்சினையே இல்லை எனலாம்.

அசாதாரண சூழந்தைகளின் வகைகளை கீழ்க்கண்டவாறு குறிப்பிடலாம். உடல் ஊனங்கள் (PHYSICAL HANDICAPS), அறிவு வளர்ச்சி குறைபாடு (MEWTALHANDICPS) சமூக நெறிப்புறழ்வு (SOCIAC HANDICAPS) பிற்போக்குத்தன்மை (BACKWARD) மன வளர்ச்சி குறைவு (MEWTAL RETAR DATION),செவிடு, ஊமை (DEAF & DUMP) குருடு (BLIND),கை, கால் ஊனம் (ORTHO PAEDICALL HANDICAPS) இளம் குற்றவாளிகள் (JUVENILE) பிரச்சினைக்குரியவர்கள் (PROBLEMATIC) என்பனவாகும்.

ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் முன்பருவப் பள்ளியில் பயிலும் சிறார்களை உற்று நோக்கியதை அடிப்படையாகக் கொண்டு அக்குழந்தையின் உடல் வளர்ச்சி அறிவு வளர்ச்சி சமூக வளர்ச்சி, மன எழுச்சி, மொழி வளர்ச்சி ஆகிய பல்வேறு வளர்ச்சிகளையும் மதிப்பிடலாம்.
உற்று நோக்கியதன் மூலம் மற்றும் வருட இறுதியில் மேற்கொள்ளப்படும் மதிப்பீட்டின் மூலமும் கிடைத்த பெறுபேறுகளை ஒரு தேர்ச்சி அட்டையில் (PROGRESS CARD) பதிவு பண்ணலாம். அரசாங்க பாடசாலைகளில் சேரும் குழந்தைகளுக்கும், தொடக்கப் பள்ளியில் சேரும் குழந்தைகளுக்கும் இந்தத் தேர்ச்சி அட்டை பயனுள்ளதாக இருக்கும் என்பது யதார்த்தமாகும்.

முன்பருவப்பள்ளி குழந்தைகளுக்கு உடல் உறுப்புக்களின் பெயரைக் கூறச் செய்தல் அவசிய மாகின்றது. தலை, கை, கால், விரல், உள்ளங்கை முடி (HAIR), நகம், முகம், வாய், பல், நாக்கு, உதடு (LIP), கண், புருவம், கன்னம், தாடை, மூக்கு, காது, வயிறு, பாதம் போன்ற முக்கிய உறுப்புக்களை குழந்தை அறிந்திருக்க வேண்டும். எண்ணிக்கை (NUMBERING)  யைப் பொறுத்தவரை ஐம்பது வரை எண்ணுதல், ஒன்று, இரண்டு, மூன்று, எட்டு, பத்து போன்ற எண்களைப் பிரித்துக் காட்டப்படுகின்றது.

வடிவங்களைப் பொறுத்தவரை வட்டம், சதுரம், முக்கோணம், அரைவட்டம் (SEMICIRCLE)  என்பவற்றை வரைதல், பெயர்களைக் கூறுதல் மேற்கொள்ளப்படுகின்றது. அத்துடன் பெரியது, சிறியது வேறுபாடு செய்தல், குட்டை, நெட்டை பிரித்தல், வர்ணங்களின் பெயரைக் கூறுதல் சூரிய ஒளியில் காணப்படுகின்ற ஏழு வர்ணங்களையும் படிகம் (PRISM) ஒன்றின் உதவியுடன் பிரித்துக் காட்டுதல் நன்று. காகிதம் மடித்தல் குழந்தைகளுக்கு கைகண்டகலை.
நீளபாட்டில் மடித்தல் சதுரமாக மடித்தல், முக்கோணமாக மடித்தல், விசிறி மடித்தல் என்பனவும் நடைபெறுகின்றது. பொது அறிவு, தொடர்ந்து பேசுதல், பொருட்களைப் பார்த்து பெயர்களைக் குறிப்பிடுதல் போன்றவற்றையும் குழந்தை முன்பருவப் பள்ளியிலேயே கற்றுவிடுகின்றமை தெரிய வருகின்றது.

குழந்தைகளின் முன்பருவ பள்ளிகளில் கதை சொல்லுதலும் நடைபெறுகின்து. நல்ல கதைகள் கேட்பது என்பது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செயலாகவே இருந்து வருகின்றது. கதையின் கருத்து தலைமுறைக்கு தலைமுறை வேறுபட்டாலும் கதை கூறுதல், கேட்பது என்பது பொழுதுபோக்கிற்கும் கற்பித்தலுக்கும் இலக்கிய ரசனையை வளர்ப்பதற்கும் உதவும் ஒரு முக்கிய கலையாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குழந்தை கதை கேட்கும் பொழுதும், கதை சொல்லும் பொழுதும் பேசும் சந்தர்ப்பத்தைப் பெறுகின்றது.

குழந்தைகளுக்கு புத்தகம் (BOOK)  ஒரு சிறந்த தோழனாகவும் பொழுது போக்காகவும் உள்ளது. புத்தகத்திலிருந்து குழந்தைகளுக்கு வேடிக்கை மற்றும் மகிழ்ச்சி கிடைக்கின்றது. பாடல்களைக் கேட்டும், கற்கும் அனுபவமானது குழந்தைகளுக்கு மகிழ்ச்சியைத் தரக்கூடியது. குழந்தை பாடல்களைக் கேட்கும் வேளையில் ஒலியைக் கேட்டு மகிழ்வதுடன் தானும் ஒலியை உண்டாக்கிச் சிரித்து மகிழ்கின்றது.

பாடும் பொழுது சொற்களைப் பொருத்தமாக உபயோகிப்பதுடன் ராகங்களையும் அறிந்து கொள்கின்றது. தொடர்ச்சியாகப் பேசத் தெரிந்த குழந்தைகள் இயற்கையிலேயே பாடவும் முடிகின்றது. நாம் பாடலைத் தெரிவு செய்து சரியாகப் பாடினால் குழந்தை அதை நன்கு கவனித்து அதன் மூலமாக புதிய வார்த்தைகளைக் கற்பதுடன் தாம் எவ்வாறு எண்ணங்களை வெளியிடுகிறோம் என்பதையும் அறிந்து கொள்கின்றது. பாடல்கள் மூலமாக குரல் வளத்தையும் மேம்படுத்த முடிகின்றது.

நடித்தல் (DRAMATIZATION) என்பது எண்ணங்களை ஆக்கச் செயல்கள் மூலமாக பேச்சின் மூலம் வெளிப்படுத்தல் ஆகும்.
குழந்தைகளுக்கு படம் வரைதல், வர்ணம் தீட்டுதல் இவற்றில் மிகுந்த ஆர்வம் உண்டு. இதனால் ஆசிரியர் குழந்தைகளிடம் ஏதாவதொரு வேடிக்கையான படத்தைக் கரும்பலகையில் வரையச் செய்யலாம். காகிதம்வர்ணங்கள் போன்றவற்றைக் கொடுத்து சித்திரங்களைக் கீறும்படி கூறலாம்.

ஆசிரியர் எளிமையான தெளிவான மொழியினைப் பேசுதல் வேண்டும். ஏனெனில் குழந்தைகள் ஆசிரியரை முன்மாதிரியாகக் கொள்கிறார்கள். ஆசிரியர் குழந்தைகளுடன் பேசும் போது அவசரமாகப் பேசக்கூடாது. அது குழந்தைகள் கற்பதற்குச் சிரமத்தைக் கொடுக்கும் என்று இந்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஒருவர் கூறுகின்றார்.

சாதாரணமாக அடிக்கடி குழந்தைகள் ஜலதோஷம் சளி மலச்சிக்கல்  (CONST IPATION), வயிற்றோட்டம், வயிற்றுவலி, வலிப்பு, காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனைவிட அனேகம் முன்பருவ பள்ளிக்குழந்தைகளுக்கும் தொற்று நோய்களும் உண்டாகலாம்.
குழந்தைகள் முன்பருவக் கல்விக் கூடத்தில் விளையாட்டு உபகரணங்களைத் தயாரிக்கக் கற்றுக்கொடுக்கப்படுகின்றது. அத்துடன் பயனற்ற பெட்டிகளைப் பயன்படுத்திக் கட்டடக்கலைகள் மேற்கொள்ளுதலும் நடைபெறுகின்றது. மேலும் தச்சு வேலை, பாசி கோர்த்தல் (THREADING OF BEADS),  கயிற்றில் முடிச்சுப் போடுதல், களிமண் விளையாட்டு கிலுகிலுப்பை செய்தல், துணிப்பந்து செய்தல் போன்றவைகளும் கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
குழந்தைகளின் தேவை மற்றும் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்ட பாடத்திட்டங்களை உள்ளடக்கிய குழந்தைகள் முன்பருவப் பள்ளியின் முக்கியத்துவம் அளப்பரியது என்பது புலனாகும்.
 அருணா தருமலிங்கம்,
வந்தாறுமூலை, செங்கலடி.

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...