Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Thursday, March 3, 2011

வாசிப்பு திறன்

“கல்வி கரையில் கற்பவர் நாள் சில
மெல்ல நினைக்கற் பிணி பல”
என்கின்றது நாலடியார். சில வாழ்நாட் பிணிச்சிற்றறிவுடைய மாந்தர் கல்வியை முற்றாக கற்க முடியாது எனபதே நாலடியாரின் வாக்கு. எனினும் பரந்து பட்ட அக்கல்வியில் அணுவளவேனும் கற்று சிந்தை விருத்தியுடைய அறிவுச் செல்வத்தை சிரத்தையோடு தேடும் போதே மனித வாழ்வு செழிப்படையும். மனிதன் மனிதனாகிறான். இதனையே இரண்டடியில் இனிதே தருகிறார் வள்ளுவப் பெருந்தகை,
“விலங்கொடு மக்களனையர் இலங்குநூல்
கற்றாரோடு ஏனையவர்”
என ஓர் உவமை மூலம் உணர்த்துகிறார். வாழும் பொருளாம் கல்வியறிவுடையோரே மனிதர் என்றும் கல்வியறிவு அற்றோர் விலங்குகள் என கூறுகிறார்.

மனிதனை மனிதனாக மாற்றும் சிறப்புடைய கல்வியை பெறுவதற்கு காட்சி, அனுபவம், கேள்வி முதலிய வழிகள் உள்ளபோதும் அவற்றுள் சிறந்து விளங்குவது நூல்களே ஆகும். அந்நூல்களும் பொருளுணர்ந்து வாசிக்கும் பழக்கத்தாலே பயன் கொள்ளப்படுகின்றது. எனவே வாசிக்கும் பழக்கம் கல்வியின் ஆணிவேராக அடித்தளமாக காணப்படுகின்றது.
“இளமையிற் கல்வி சிலையில் எழுத்து”
என்பது உளவியல் சார்ந்த ஒரு முதுமொழி. மன விசாரங்களும், மன விகாரங்களும் அற்ற இளமைப் பருவத்தில் கற்கும் கல்வி சிந்தாது, சிதறாது, சிதையாது. மனதிலே பசுமரத்தாணி போல் பதியும். எனவேதான் கல்விக்கு அடித்தளமாய் அமையும். வாசிப்பு பழக்கம் இளமையிலே அரும்பி வளர்ந்து முதிர்ச்சி பெறுதல் வேண்டும். அதனாலேயே புதிய கல்விக் கொள்கையில் வாசிப்புக்கு அதி முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
மாணவர் மொழியாற்றலில் முன்னேற்றம் காண்பதற்கு முதனிலையாகவும், முதன்மை நிலையாகவும் வாசிப்பு அமைகின்றது. நூல்களை பிழையின்றி வாசித்தல், கருத்தை விளங்கிக் கொள்ளல், விளங்கிய கருத்தை வெளிப்படுத்தல் ஆகிய முத்திறனும் மொழித்தேர்ச்சியில் அடங்குவன. மாணவர் சிலர் பிழையற வாசிப்பர். ஆனால் கருத்தை விளங்கிக் கொள்ளமாட்டர்கள். சிலர் வாசித்து விளங்கிக் கொள்வர். ஆனால் விளங்கியதை வெளிப்படுத்தமாட்டர். அவர்கள் கனவு கண்ட ஊமைகள் போன்றவர்கள். எனவே வாசித்தவற்றை விளங்கிக் கொண்டு அவற்றை வெளிப்படுத்தும் ஆற்றலே மெய்யான மொழியாற்றலாகும்.
முறையான மொழியாற்றல் கைவரப்பெற்ற மாணவனின் பேச்சில் தெளிவும், கருத்தாழமும் காணப்படும். உள்ளங்கை நெல்லிக்கனி போல் எந்தக் கருத்தையும் தெளிவாகப் பிறர் விளங்கிக் கொள்ளுமாறு உரைப்பான். அவனது எழுத்து நடை எளிமையும், இனிமையும், தெளிவும், கருத்தாழமும், வழுவின்மையும் கொண்டதாக அமையும்.
வாசிப்பு பழக்கம் பெற்ற மாணவன் ஒருவனுடைய கட்டுரைகள் அவ்வாறற்ற மாணவன் ஒருவனின் கட்டுரையுடன் ஒப்பிட்டு நோக்கின் உண்மை புலனாகும். அன்றியும் செம்மையான வாசிப்பு திறன் பெறாத மாணவன் பள்ளியிற் பயிலும் பாடங்களின் சிறப்பு நிலை அடைய முடியாதவாறு திண்டாடுகின்றான். குருடன் போல தடுமாறி பருவலடைகின்றான். குறிப்பாக கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை கற்கும் மாணவன் விவேகியாக இருக்காவிடின் அவனுடைய சீரற்ற வாசிப்பு திறன் காரணமாக அவன் அப்பாட நூல்களையோ, அவை சம்மந்தமான வினாக்களை விரைந்து விளக்குமாற்றல் இல்லாது திண்டாடுகின்றான். தனது பூரண ஆற்றலை வெளிப்படுத்த முடியாதவனாகின்றான். அவன் விவேகத்தால் முழுப்பயனை அடைய முடியாதவனாகின்றான். காட்டில் எரியும் நிலவைப் போல விவேகம் குறைந்தவனாயினும் வினாக்களை வாசித்து விளங்கித் தெளிவுறுபவன் விடைகளையெழுதி சிறப்பு சித்தி பெறுகின்றான். எனவே கல்லூரியில் பாடங்களில் மாணவர்கள் திறமை காட்ட வாசிப்பு திறன் இன்றியமையாததாகும்.

பாடசாலையில் பயிலும் பாடங்களோடு மாத்திரம் மாணவர்களின் கல்வி முற்றுப்பெறுவதில்லை. கரையற்ற கல்விக்கடலிலுள்ள சின்னஞ்சிறு துளியே அவன் கற்கும் கல்வி. அக்கல்வியில் ஒரு மாணவனது அறிவு பெருகி விடும் என எண்ணுவது பகற்கனவு. எனவே மாணவன் பாடநூல்களை கற்பதோடு பிற பல நூல்களை வாசித்தல் வேண்டும். “கண்டது கற்ற பண்டிதனாவான்” என்பது பழமொழி. நல்லனவென கண்டவற்றை கற்க வேண்டுமென அப்பழமொழி கூறுகின்றது.
வாசிப்பு திறனிலே தேர்ச்சி பெற்ற மாணவனின் உள்ளம் தணியாத பசி கொண்டதாக இருக்கும். எத்தனை நூல்களை வாசித்தாலும் அவனது பசி அடங்காது. மணிமேகலை எனும் காப்பியத்தில், “யானைப்பசி எனும் நோய் கொண்ட காயசண்டிகை என்பவள் எவ்வளவு உணவு, எந்நேரம் கொடுத்தாலும் அடங்காத பசி கொண்டவள்” என குறிப்பிடப்படுகின்றது. ஒவ்வொரு மாணவனும் காயசண்டிகையின் உணவுப் பசி போல வாசிப்பில் பசி கொண்டிராவிட்டால் அவனது உயர்வுக்கு வித்திடப்படுமோ? தானாகவே கிணற்றுத் தவளை நிலைக்கு சென்று விடுவான். ஆழமற்ற அறிவுடையவனாவான்.
மாறாக மாணவன் வாசிப்பில் கவனம் செலுத்துவானாகில், அறிவால் மட்டுமல்ல உள்ளத்தாலும் உயர்ந்தவனாகின்றான். வாழ்வினையும் வாழிவின் விழுமியங்களையும் புலப்படுத்தும் இலக்கியம், கட்டுரை, கவிதை முதலியவற்றை படிப்பதால் வாழ்வில் தான் கண்டறியாத புதிய புதிய கதைகளை உருவாக்குகின்றான், குணாதிசயங்களை உணர்கின்றான், பலகோணங்களில் வாழ்வை காண்கின்றான். பற்பல புதிய விடயங்களை பெறுகின்றான். நல்லவை எவை? தீயவை எவை? என பாகுபடுத்தக்கூடியவனாகின்றான்.
இதனால் அவன் உள்ளம் விரிவடைகின்றது. எதிர்கால வாழ்விற்கு தம்மை தயார் செய்யும் உன்னத நிலை உருவாகின்றது. மாணவர்களே எதிர்காலத்திலன் சிற்பிகள், ஒரு நாட்டின் தூண்கள், நாளைய விடியல்கள், எதிர்கால குடிமக்களும் அவர்களேதான். அவர்கள் அறிவுச்செல்வத்தால் உள்ளத்தில் உயர்ந்து உருவாக வேண்டுமேயானால், அவர்கள் வாசிப்புத் திறனை விருத்தி செய்ய வேண்டும். வாசிப்பு திறன் கைவரப்பெற்ற மாணவன் கல்விக் கரையை கடந்தவனாகின்றான். கல்வியெனும் நீள் வளியில் அரைபங்கு கடந்துவிடுகின்றான். அன்றியும் முழுமையான மனித வளர்ச்சிக்கு தன்னைத் தானே ஆயத்தமாக்கியவனாகின்றான்.
ஆகவே மாணவர்களாகிய நாம் நிகழ்கால விதைகள், எதிர்கால விருட்சங்கள் என்பதை உணர்ந்து வாசிப்பு திறனை வளர்த்து வாழ்க்கை எனும் நீண்ட பயணத்தினை இலகுவில் கடப்போமாக.

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...