Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Sunday, March 27, 2011

மாணவர்களுக்குப் பயன்படும் இணைய தளங்கள்


காலம் மாறிவிட்டது. முன்பு கல்வியைத் தேடி நாம் சென்றோம். கல்வி நிலையங்கள், நூலகங்கள், பொதுக் கூட்டங்கள், பத்திரிகைகள்... எனத் தேடித் தேடிச் சென்றோம். இன்றோ, உட்கார்ந்த இடத்திலிருந்தே நம்மால் அனைத்துக் கல்வியையும் பெற முடிகிறது. இணையம் அதற்குப் பேருதவி புரிகிறது. கல்வி என்பதே உலகைக் கற்பது தான். ஏட்டுக் கல்வி போதாது. பாடப் புத்தகங்களுக்கு வெளியிலும் கற்றுக்கொள்ள நிறைய உண்டு. அதுவும் இணையத்தில் எண்ணற்ற பக்கங்கள், நமக்கு விருந்து படைக்கின்றன. மாணவர்களுக்குப் பயன்படும் இணைய தளங்கள் பல உண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்.


http://www.textbooksonline.tn.nic.in

பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் பலரும் முதுகில் பெரும் மூட்டையாகப் புத்தகங்களைச் சுமந்து செல்வதைப் பார்க்கிறோம். இதற்கு ஒரு மாற்று கிடைத்துவிட்டது. இனி பாடநூல்களை வாங்கவே வேண்டாம். ஒரு கையடக்க கணினி இருந்தால் போதும். அதில் எல்லாப் பாடநூல்களையும் சேமித்துப் படிக்க முடியும். தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையும் தமிழ்நாடு பாடநூல் நிறுவனமும் இணைந்து இந்த அரிய பணியை ஆற்றியுள்ளன. தேசிய தகவலியல் மையம், இந்தத் தளத்தினை வடிவமைத்துள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளின் அனைத்துப் பாடநூல்களின் அனைத்துப் பக்கங்களையும் இணையத்தில் ஏற்றி வைத்துள்ளார்கள். மேலும் ஆசிரியர் பயிற்சிப் பட்டயப் படிப்புக்கான பாடநூல்களும் இங்கே கிடைக்கின்றன. எழுத்தில் மட்டும் அல்லாது, ஒலி வடிவிலும் பாடங்களைக் கேட்க வழி செய்துள்ளார்கள். இப்போதைக்கு இந்த வசதி, ஆங்கிலப் பாடங்களுக்கு மட்டும் கிடைக்கிறது. பிற்காலத்தில் இதர பாடங்களுக்கும் கிடைக்கலாம். மாணவர்களுக்கு இந்தத் தளம், ஓர் அற்புத வரம்.

http://www.kalvimalar.com/tamil

தினமலர் நாளிதழின் கல்வி தொடர்பான இணைய தளம், இது. மாணவர்களின் கேள்விகளுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் பதில் அளிக்கிறார். செய்திகள், கட்டுரைகள், ஐஐடி / என்ஐடி, கல்லூரிகள் ஒப்பீடு, NAAC அங்கீகாரம், மீடியா ரேங்கிங், கல்விக் கடன், உதவித் தொகை, சாதனை மாணவர்கள், புதிய பாடப் பிரிவுகள், புதிய கல்லூரிகள், அரசு சலுகைகள், இட ஒதுக்கீடு, வழிகாட்டி, புக்ஸ் / சிடி, புள்ளி விபரம், கல்வித் தகுதி, கல்வி ஆலோசகர்கள்....... எனப் பற்பல பிரிவுகளில் செய்திகளைக் குவித்துள்ளது. மேலும் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பாடப் பிரிவுகள், தொழிற்கல்வி, பாலிடெக்னிக் கல்லூரிகள், தொலைநிலைக் கல்வி, தொழிற்கல்வி கவுன்சில்கள், மேலாண்மைக் கல்வி என மேற்படிப்புக்கான அனைத்து விவரங்களையும் தொகுத்து வழங்கியுள்ளது. மேலும் கல்வியாளர்களின் கருத்துக் களம், ஆன்லைன் மாதிரித் தேர்வு, நுழைவுத் தேர்வு, தேர்வு முடிவுகள், வெளிநாட்டுக் கல்வி.... எனக் கல்வி தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வந்துள்ளது. தமிழில் முழுமையான முதல் கல்வித் தளமாக இது உருவெடுத்துள்ளது. இதே தளம், ஆங்கிலத்திலும் கிடைக்கிறது.

http://www.gymnasiumforbrain.com

நீங்கள் புத்திக் கூர்மை உடையவரா? ஆம் எனில் இந்தத் தளத்திற்கு வந்து உங்கள் திறனைச் சோதித்துப் பாருங்கள். இல்லாவிட்டாலும் புத்தியைக் கூர்தீட்டுவது குறித்து, இங்கு கற்றுக்கொள்ளுங்கள். ஆங்கிலத்தில் அமைந்துள்ள இந்தத் தளத்தில் பல்வேறு புதிர்கள், நம்மைச் சிந்திக்க வைக்கின்றன. விளையாட்டாகவும் இவற்றை முயன்று பார்க்கலாம். துரித கணிதம், புள்ளிகளைக் கொண்டு வித்தியாசமான கோலங்களை உருவாக்கும் முறைகள், நீதிக் கதைகள் ஆகியவற்றையும் இங்கு கற்கலாம். எளிய கணக்குகளின் மூலம் மூளைக்கு வேலை தரும் இந்தத் தளம், சிறுவர்களுக்கான மகத்தான இணைய தளம் என்ற விருதினைப் பெற்றுள்ளது. அமெரிக்க நூலகக் கழகம், இந்த விருதினை வழங்கியுள்ளது. முயற்சி உடையவர்களுக்கு வானமே எல்லை என்பதைச் சொல்லால் மட்டுமின்றி, செயலாலும் நிறுவி வருகிறது இந்தத் தளம்.

http://www.subaonline.de/education/robot/robondex.html

ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடிப்பில் உருவாகும் எந்திரன் (ரோபோ) படம் பற்றி அனைவரும் அறிவார்கள். ஆனால், வெறும் கற்பனையாக இல்லாமல், ரோபோவை நாமே உருவாக்க முடியும். ஜப்பானில் இந்த முயற்சிகள் அதிகம். இதை உருவாக்குவது குறித்து, ஆங்கிலத்தில் பல இணைய தளங்கள் உண்டு. ஆனால், தமிழில் உண்டா? ஆம். இங்கும் உண்டு. ஜெர்மனியில் வசிக்கும் சுபாஷினி டிரெம்மல் என்பவர், தமிழில் இயந்திரவியலைக் கற்றுத் தருகிறார். ரோபோட் - ஓர் அறிமுகம், அதன் வரலாறு, அதற்கான சட்ட திட்டங்கள், சுபா உருவாக்கிய ரோபோட் மாடல்கள், இயந்திர நினைவுச் சின்னங்கள்... என அரிய பல செய்திகள் இதில் உள்ளன. மாணவர்கள் மட்டுமின்றி, இயந்திரவியல் ஆர்வம் கொண்ட அனைவருக்கும் பயன்படும் தளம் இது.


http://thamizham.net

பொள்ளாச்சி நசன் நடத்தி வரும் இந்தத் தளத்தில் தமிழ் தொடர்பான பல விவரங்களும் கொட்டிக் கிடக்கின்றன. ஆங்கிலம் வழியாகத் தமிழைக் கற்க, இந்தத் தளம் சிறப்பான முயற்சியை முன்னெடுத்துள்ளது. தமிழ் எழுத்துகள் / சொற்கள், அவற்றை உச்சரிக்கும் முறை, அவற்றின் பொருள், வாக்கியங்களை அமைக்கும் முறை... எனப் படிப்படியாகக் கற்றுத் தருகிறது. உச்சரிக்கும் முறையை நாம் கேட்கவும் முடியும் என்பது இதன் சிறப்பம்சம். நூற்றுக்கணக்கான தமிழ்ச் சிற்றிதழ்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ் நாள்காட்டி, புகைப்படங்கள், தினம் ஒரு மின்னூல்.... எனப் புரட்டப் புரட்ட... ஒரு கருவூலமாகவே இந்தத் தளம் மலர்ந்துள்ளது.


http://www.mazhalaigal.com

தமிழ் / ஆங்கிலம் என இரு மொழிகளிலும் உள்ளடக்கங்களைக் கொண்ட வலைத் தளம், மழலைகள்.காம், ஒருங்குறியில் அமைந்துள்ளது. இதில் படப் புதிர்கள், விடுகதைகள், பழமொழிகள், சிறுவர் பாடல்கள்.... எனப் பல உண்டு. தமிழ் தொடர்பான பல்வேறு விவரங்களும் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன. மாணவர்கள் வரைந்த ஓவியங்கள் உண்டு. பொது அறிவுத் தகவல்கள் உண்டு. தமிழின் முதல் நாவலாகிய பிரதாப முதலியார் சரித்திரத்தை, பிரதாபன் கதை என்ற பெயரில் வெற்றி வளவன் எழுதி வருகிறார். தமிழில் எழுதுவதற்குப் பயன்படும் இலவச மென்பொருள்கள் பலவற்றையும் இதில் பட்டியல் இட்டுள்ளார்கள். அழகி மென்பொருள் மூலம் ஆங்கில ஒலிபெயர்ப்பு முறையில் தமிழைத் தட்டெழுத, வழிகாட்டி உள்ளார்கள். மேலும் பல்வேறு இணைய தளங்களுக்கு இணைப்பும் கொடுத்துள்ளார்கள். இவற்றின் மூலம் பல்வேறு சேவைகளையும் ஒரே முகவரியில் பெற முடிகிறது. ஆ.கி.ரா (ஏ.கே.ஆர்.) என்ற ஆ.கி.ராஜகோபாலன், இதன் ஆசிரியர். 20க்கும் மேற்பட்ட எழுத்தாளர்கள், இதன் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றுள்ளார்கள்.

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...