Bahan Mudah Lulus Untuk UPSR

Close Learning in the Cloud! Cloud Computing for Teachers & Schools

UPSR தமிழ் மொழி

PSS SJK(T) KERUH

சங்ககால வரலாறும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகளும்

Monday, May 30, 2011

சிறந்த நூல்களே சிறந்த நண்பர்கள்எப்பொழுதோ நிகழ்ந்ததை நிகழ்ந்தது நிகழ்ந்தவாறு இப்பொழுதும் நாம் அறிந்து கொள்ள உதவுவது புத்தகங்கள். எங்கோ நடந்ததைக் கண்டுபிடித்து அதை இங்குள்ள நமக்கு எடுத்து விளக்குபவை நூல்களே. எவரோ அறிந்ததை நாமும் தெரிந்து கொள்ளத் துணை நிற்பவை நூல்கள் தாம்.
விலங்குகளின் வாழ்க்கை ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எப்படியோ அப்படியே தான் இன்றும். எப்படியும் வாழலாம் என்பது விலங்கு வாழ்க்கை. இப்படித்தான் வாழ வேண்டும் என்பது மனித வாழ்க்கை. முன்பு வாழ்ந்தவர்களின் அனுபவங்களையும் அறிவையும் எடுத்துக் கொண்டு அவர்கள் விட்ட இடத்திலிருந்து வாழ்வைத் தொடர் வதால்தான் மனித வாழ்க்கை தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்று வருகிறது.
முன்னோர்தம் அறிவையும் அனுபவத் தையும் நமக்குள் இறக்கி வைக்கிற நண்பர்கள் தான் நூல்கள். நூலைப் படைத்தவனும் நூலைப் படித்தவனும் ஒரு நாள் மாண்டு போனாலும் யாண்டும் யாண்டும் வாழும் வரம் பெற்றவை நூல்கள். உன்னிடம் எதையும் எதிர்பார்க்கமல் தன்னை முழுமையாக உனக்கு அளிக்கும் நண்பனே புத்தகங்கள்என்கிறார் அமெரிக்க கவிஞர் லாங்ஃபெலோ.
ஆயிரமாயிரம் மலர்களின் மகரந்தச் சேகரமே தேன் கூடாகிறது. ஆயிரமாயிரம் கருத்துக்களின் சேகரமே புத்தகங்கள். இவை வெறும் காகிதங்களின் கற்றையல்ல. அவை உண்மைகளின் ஊற்றுக்஑ண். புத்துலகு நோக்கி மனிதனை வழி நடத்துபவை. புத்தகத்தைத் திறப்பவன் அறிவுச் சுரங்கத்தின் வாயிலைத் திறக்கிறான்.
சிறந்த நூல்களே மிகச்சிறந்த நண்பர்கள். காலத்தையும் விஞ்சி நிற்கிறகருத்து மணிகளை உள்ளடக்கியிருக்கிறநூல்களைப் போல உயர்ந்த பண்புகளை உடைய நல்ல நண்பர்களைப் பெறுதல் அரிது.
நண்பர்கள் கூட சில சமயங்களில் சறுக்கிட நேரலாம். ஏமாற்றி விடக்கூடும். ஆனால் நம்மை எப்போதும் கைவிட்டு விடாத நல்ல நண்பர்கள் புத்தகங்களே. நாளும் பொழுதும் என்னோடு நாவாடிக் கொண்டிருக் கிற என்னை எப்போதும் வீழ்த் திடாத நண்பர்கள் புத்தகங்களேஎன்றார் கவிஞர் ராபர்ட் கதே.
வாசிப்பு ஒருவனை எப்போதும் தயாராக இருப்பவனாக உருவாக்குகிறது என்கிறார் பிரான்சிஸ் பேகன் என்ற பேரறிஞர். ஆம் வாழ்க்கையின் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ளுகிற பேராற் றலைப் புத்தகங்கள் நமக்குப் புகட்டுகின்றன. சிறந்த நூல்களை, சிந்தனையைத் தூண்டி வளர்க்கும் நூல்களை, மனதை உழுது பண்படுத்திப் பயன் விளைக்கும் நூல்களைப் படிக்க வேண்டும்.
காட்டுமிராண்டித்தனமான நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் புத்தகங்களினால் ஆளப்படுகின்றனஎன்றபேகனின் கூற்றை மெய்ப்பிப்பதற்குச் சான்றுகள் வரலாறு நெடுகிலும் உண்டு. நாளந்தா பல்கலைக்கழகம் தீக்கிரையானதும், யாழ்ப்பாண நூலகம் நெருப்புக் குளியலுக்குள்ளானதும், புத்தகங் களின்பால் அச்சம் கொண்டவர்களை அடை யாளம் காட்டும் நிகழ்ச்சிகளாகும். படையெடுப் பின் போது நூல்களை மதித்துப் பாதுகாத்த மன்னர்கள் வரிசையில் அலெக்சாண்டர், பாபர் ஆகியோர் முதன்மையானவர்கள். அரண்மனை நூலகத்தில் ஏராளமாக நூல்களைச் சேகரித்து வைத்த அக்பர் எழுதப்படிக்க தெரியாதவர் என்றாலும் நல்ல நூல்களை வாசிக்கச் சொல்லிக் கேட்டதன் விளைவாக சமயப் பொறைமிக்க சான்றாளராகவும், சான்றோ ராகவும் விளங்கினார்.
நூல் படிக்கும் பழக்கம்
பொதுவாக நூல்களைப் படிக்கும் பழக்கம் நம்மவர்க்கு மிகக்குறைவு. ஒருவரைப் பார்த்து, “புத்தகம் படிக்கிறபழக்கம் உண்டா?” என்று கேட்டேன். உண்டு என்றார். எப்போது படிப்பீர்கள்? என்றேன். இரவில் படுக்கையிலே படுத்துக் கொண்டு தூங்கும் முன்பு என்றார். ஏன் அந்தச் சமயத்தில் படிக்கிறீர்கள்? என்று கேட்டால் அப்படிச் செய்தால் தான் விரைவில் தூக்கம் வரும்என்றார் இது ஒரு வகை. இன்னும் சிலரைக் கேட்டால் எப்போதாவது பொழுது போகவில்லை என்றால் புத்தகம் படிப்போம் என்றார்கள். இவர்கள் இரண்டாவது வகை.
இன்னும் சிலர் இருக்கிறார்கள். படிப்பதற்கு என்று நேரம் ஒதுக்கிப் படிப்பார்கள். எப்போதும் அவர்களிடம் சிறந்த நூல்கள் இருக்கும். இந்த வகையினரே சிறந்த படிப்பாளிகள். நீங்கள் எப்போது படிப்பீர்கள் என்று சிலர் என்னைக் கேட்பதுண்டு. காலையிலும், மாலையிலும், கடும்பகலிலும் நாளும் பொழுதும் நற்பொருள் விளங்கும்படி படிக்க வேண்டும். புத்தகம் படிக்கிறநல்ல பழக்கமுள்ளவர்களை அப்பழக்கமற்றசிலர் புத்தகப் புழுக்கள் என்று இழிவாகப் பேசுவர். அவர்களுக்காகச் சொல்லுகிறேன். மண் புழுக்கள் மண்ணை வளமாக்கும், புத்தகப் புழுக்கள் மனதை வளமாக்குவர்”. நூல்கள் வாசிப்பது என்பது ஓர் அற்புதக் கலை. இசைக் கருவிகளை மீட்டுவது மட்டும் வாசிப்பல்ல. நூல்களைப் படிப்பதும் வாசிப்புதான். வாசிப்பு மனதை ஒருமுகப்படுத்தி நினைவுத்திறனைக் கூட்டும். கற்பனையையும் அறிவின் மேதாவிலாசத்தையும் செழுமை செய்யும். புதிய புதிய பொருள்களைத் தந்து கொண்டே இருக்கும். வாசிப்பது என்பது சிறுகதையல்ல, அது ஒரு தொடர்கதை.
கிரேக்க நாட்டுச் சிந்தனையாளர் சாக்ரடீசுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நஞ்சு தனக்குக் கொடுக்கப்படும் வரை படித்துக் கொண்டே இருந்தாராம். இலிபியா நாட்டு உமர் முக்தர் என்றபுரட்சியாளர் தூக்குக் கயிற்றைஅவரது கழுத்தில் மாட்டும் வரை படித்துக் கொண்டிருந்தாராம். இலண்டன் நூலகத்தில் இருபது ஆண்டுக் காலம் படித்து ஆய்வு செய்த கார்ல் மார்க்ஸ் தான் பின்னாளில் பொதுவுடைமைத் தத்துவத்தின் தந்தையாக விளங்கினார்.
நேரு தான் மறைந்த பின் தமது சடலத்தின் மீது மலர் மாலைகள் வைக்கக்கூடாது புத்தகங்கள்தான் வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம். பேரறிஞர் அண்ணா புற்று நோயால் உயிரோடு போராடிக் கொண்டிருந்தார். சிகிச்சைக்காக அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த சமயத்தில் ஒரு நாள் மருத்துவர்கள் இன்று உங்களுக்கு அறுவைச் சிகிச்சை என்றபோது, தாம் வாசித்துக் கொண்டிருந்த புத்தகத்தின் சில பக்கங்கள் பாக்கி இருப்பதால் அதை முடிக்கும் வரை உயிர் காக்கும் அறுவைச் சிகிச்சையைத் தள்ளி வைக்கச் சொன்னாராம்.
முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்கள் சோவியத் இரஷ்யாவில் இந்தியத் தூதுவராகப் பணியாற்றிய போது ஒரு நாளில் பன்னிரண்டு மணி நேரம் படிப்பதிலும், படித்ததைச் சிந்திப் பதிலும் செலவிட்டாராம். இந்தச் செயலே அப்போதைய இரஷ்யாவின் அதிபராக மட்டு மல்ல சர்வாதிகாரியாகவும் இருந்த ஸ்டாலின் அவர்களின் நன்மதிப்பைப் பெறக் காரண மாயிருந்தது. இரஷ்ய நாடு இந்தியாவைச் சிறிதும் மதிக்காத காலம் அது. இரும்பு மனிதர் என்றழைக்கப்பட்ட ஸ்டாலின் இதயத்தையும் கவர்ந்த ஒரு பேரறிஞராக, தத்துவஞானியாக டாக்டர் இராதாகிருஷ்ணன் விளங்கக் காரணம் அவர் கற்றனைத்தூறும் அறிவுஎன்றவள்ளுவர் குறளுக்கேற்ப அவருடைய நூல் படிக்கும் பழக்கமே.
இளமையில்தான் மிகச்சிறந்த பண்புகள் பதியம் போடப்படுகின்றன. நூல்கள் வாசிக்கும் ஆர்வத்தை இளமையிலேயே ஊட்ட வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்கள் சொல்வதிலிருந்து கற்றுக்கொள்வதை விட பெற்றோர்கள் செய் வதைப் பார்த்து மிகுதியாக கற்றுக் கொள் கிறார்கள். எனவே முதலில் பெற்றோர்கள் நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
ஒவ்வொருவரும் ஓராண்டில் சராசரி யாக இரண்டாயிரம் பக்கங்கள் படிக்க வேண்டும் என்று பன்னாட்டுக் கல்வி அறிவியல் பண்பாட்டு நிறுவனம் பரிந்துரை செய்கிறது. ஆனால் நம் நாட்டில் ஆண்டொன்றுக்குச் சராசரியாக 32 பக்கங்கள் மட்டுமே படிக்கிறார்கள் என்று யுனெஸ்கோ புள்ளி விவரம் கூறுகிறது.
ஒருவரின் நேரம் வெறும் பொழுதாக இன்றி நறும் பொழுதாகவும், வெட்டிப் பொழுதாக ஆகாமல், வெற்றிப் பொழுதாகவும் மாற்றும் வல்லமை நூல்கள் வாசிப்பிற்கே உண்டு. சிக்கல்களை எதிர்கொள்வதற்கும், சவால் களைச் சந்திப்பதற்கும் புத்தக வாசிப்பு பெருந் துணை யாகிறது. பதவி பட்டம் பெறுவதற்கு மட்டும் என்றில்லாமல் ஒன்றை ஏற்கவோ அன்றி ஒதுக்கவோ, மறுக்கவோ அன்றி விவாதிக்கவோ தேவையான ஆற்றலை வாசிப்பு வழங்கும்.
வாங்கிப்படி
எட்டையபுரம் மகாராஜாவுடன் சென்னை சென்ற பாரதியார், “செல்லம்மா! வரும்போது உனக்குத் தேவையான சாமான்கள் வாங்கி வருகிறேன்என்று மனைவியிடம் சொல்லிச் சென்றவர் மகாராஜா கொடுத்த பணத்தில் மூட்டை மூட்டையாய் புத்தகங்கள் வாங்கி வந்து விட்டார். கோபமாய்ப் பார்த்த மனைவியிடம், “செல்லம்மா! அழியும் பொருளைக் கொடுத்து அழியாத செல்வத்தைக் கொண்டு வந்துள்ளேன்என்று கூறி சமாதானம் செய்தாராம்.
நம்மவர்க்கு நூல்களை விலைபோட்டு வாங்கிப் படிக்கிற பழக்கம் மிகமிகக் குறைவு. படிப்பவர்களிலும் இரவல் வாங்கிப் படிப்பவர்களே மிகுதி. அப்படி இரவல் வாங்கிச் செல்கிற பலர் நூல்களைத் திருப்பித் தருவதே இல்லை. ஒருமுறை ஆங்கில நாடக நூலாசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் பேசும்போது புத்தகங்களை இரவலாக வாங்கிச் செல்வோரில் சிலர் திருப்பித் தருவதே இல்லை. என்னிடம் பெரிய நூலகமே உள்ளது. அதில் உள்ள புத்தகங்களில் பெரும்பாலானவை அப்படி வந்தவையேஎன்றாராம். தாங்கள் வாங்கிய நூலை மற்றவர்களும் படித்துப் பயன் பெறட்டுமே என்கிறதாராள மனம் கொண்டவர்கள் கூட, நாணயமற்றவர்கள் ஒரு சிலர் இருப்பதால் எளிமையாகவும், நேர்மையாகவும் இருக்கிறவர்கள் இரவல் கேட்கும் போது மறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல அப்படியே நூல்களை இரவல் வாங்கிச் சென்று திருப்பிக் கொடுத்தாலும் அது உருக்குலைந்து கிழிந்து அழுக்காகி வந்து சேரும்.
பொன்னள்ளித் தந்தாலும் தருவேன் அன்றி புத்தகத்தை நானிரவல் தரவே மாட்டேன்! கன்னியரை புத்தகத்தை இரவல் தந்தால் கசங்காமல் வீடுவந்து சேர்வதில்லை!
என்பார் கவிஞர் சுரதா.
இதற்கு மாறான சில நிகழ்வுகளும் உண்டு. கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளைப் பிரிப்பதற்காக நெடுஞ்சுவர் ஒன்று எழுப்பப் பட்டது. இதனால் மேற்கு பெர்லின் அமெரிக்கன் மெமோரியல் நூலகத்திலிருந்து புத்தகங்கள் எடுத்துச் சென்றஒரு கிழக்கு ஜெர்மன் வாசகரால் அவற்றைத் திருப்பிக் கொடுக்க முடியாமலே போய்விட்டது. இருபத் தொன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அந்த நெடுஞ்சுவர் இடிக்கப்பட்டு இரு ஜெர்மனி களும் இணைக்கப் பெற்றதைத் தொடர்ந்து அந்த வாசகர் புத்தகங்களைப் பத்திரமாகத் திரும்ப ஒப்படைத்தாராம்.
இதில் பின்னவரைப் பின்பற்ற முயல்வோம். இரவல் பெற்றதைத் திருப்பித் தருவதன் மூலம் நட்பை நழுவ விடாமல் பார்த்துக் கொள்வோம்.
சிறந்த புத்தகம் என்பது அதன் வடிவமைப்பிலோ தாளின் தரத்திலோ, அட்டையின் அழகிலோ இல்லை. வாசிப் பவரது மனதில் அது உண்டாக்கும் தாக்கத்தில் மறைந்திருக்கிறது.
எனவே சிறந்த நூல்களுக்குச் செலவிடுவது செலவே அல்ல. அது சேமிப்பு. சேமிப்பு எதற்கு? தேவை வரும் போது பயன்படுத்தத்தான். இடுக்கண் வருங்கால் உடுக்கை இழந்தவன் கை போல ஓடி வந்து உற்ற துணையாக, வழி காட்டியாக இருப்பவை நூல்களே. நமக்கு மட்டுமல்ல. அடுத்த தலைமுறைக்கும் உங்களது சந்ததியர்க்கும் அது வழி காட்டும், வாழ்வில் ஒளி காட்டும்.
 டாக்டர். பெரு. மதியழகன்

Post Comment

No comments:

Related Posts Plugin for WordPress, Blogger...